திருக்கோவில் வரலாறு (ஸ்தலபுராணம்)

 பல்லாவரம் மாநகராட்சி பழைய பல்லாவரம் பகுதியில் புதிய  வாழ்விடங்கள் உருவாகத் தொடங்கிய 1980 – 90 காலகட்டங்களில்  உருவான பெருமாள் நகர்மற்றும் பவானி நகர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளேஅமைந்திருந்த நாட்களில் பகுதி முன்னோடிகள் சிலர் ஒன்று கூடி உள்ளார்ந்த இறை உணர்வினால் இங்கே வருங்காலத்தில் காலாகாலத்திற்கும் நிலைத்து நின்று பயன் தரும் வகையில் அருள்மிகு விநாயகருக்கு ஓர் ஆலயம் நிறுவ வேண்டும் எனத் திட்டமிட்டனர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு எஸ் கொண்டையா திரு எஸ்.. கல்யாணசுந்தரம், திரு. ராஜாராமன் திரு மாய. கண்ணன் திரு கே குருமூர்த்தி திரு.ராமசாமி பிள்ளைஆகியோர். . திரு மாய. கண்ணன் அவர்கள் மனைவியார்  திருமது சரோஜா அவர்கள் தனக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்பின் ஒரு பகுதியை கோயில் நிறுவ தருவதற்கு முன்வந்தார்.

1988 ஆம் வருடம் ஏப்ரல் மாதம்8ஆம் நாள் அருள்மிகு விநாயகர் பெயருக்குநன்கொடைப் பத்திரமாக எழுதி ஒப்பமிட்டுப்  பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக 1148/1988பதிவு  எண்ணாக பதிவு செய்யப்பட்டது.  முதற்கட்டமாக  நாலு சவுக்குக் கழிகள் நட்டு தென்னை ஓலைக் கூரை அமைத்துக் களிமண்ணால் ஆன விநாயகர் திருக்கோவில் 1987 ஆம் ஆண்டு  அருள்மிகு விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவப்பட்டது.  இத்திருக்கோயிலுக்கு நிரந்தரமானகட்டிடம் உருவாக்க வேண்டும் என்ற செயல் திட்டத்தினை நிறைவேற்றிட  ஸ்ரீ விநாயக பக்தஜன சபா என்ற அமைப்பு நிறுவப்பட்டு முறைப்படிபதிவு செய்யப்பட்டது. இத்திருக்கோயிலுக்கு காஞ்சிபுரம் சங்கரா மடம் மஹாபெரியவர் “ஸ்ரீ விஜய கணபதி ஆலயம்” எனப்பெயர் சூட்டி வாழ்த்தினார். ஸ்ரீ விஜயகணபதிக்கான கருவறை மற்றும் அர்த்த  மண்டபம்  பரிவார தேவதைகளாக அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி, குபேர கணபதி துர்க்கை முருகன், ஆஞ்சனேயர் இவர்களுடன் ஸ்ரீ கிருஷ்ணனும் நிறுவப்பட்டு, அடையாறு மத்ய கைலாஷ் குடமுழுக்கு தினமான 24.09.1990 அன்று  திருக்குடமுழுக்கு விழா சீரும் சிறப்புமாக நடத்தப் பட்டது. பவானி நகரில் வசிக்கும் ஸ்ரீ விநாயக பக்தஜன சபாவில் தலைவர் பொறுப்பு வகிக்கும் திரு.எஸ்..கல்யாணசுந்தரம் மூலவர் ஸ்ரீ விஜயகணபதி உருவச் சிலையினை நன்கொடையாக அளித்தார். திருக்குடமுழுக்கு விழா முடிவுற்ற நிலையில் ஆறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் மற்றும். ஆலய நீர் தேவைக்காக ஒரு கிணறும் நிறுவப்பட்டது.

அது முதல் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் ஊர்வலம்  வரும் பொருட்டு லலித் வித்யாலயா உரிமையாளர் திரு நடராஜ பிள்ளை அவர்கள் சப்பரம் ஒன்று செய்து கொடுத்தார்கள் அது சமயம் வீட்டிற்கு ரூபாய் 25/- வரியாக விதிக்கப்பட்டு அதனை அனைத்து இந்து குடும்பத்தாரிடமிருந்தும் தவறாது வசூலிக்கப்பட்டது அந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நகர பிற மதத்தினர் நன்கொடையும் உண்டு சிறப்பு அம்சமாக நகர  நடுவே தொலைக்காட்சி பெட்டி வைத்து இரவு திரைப்படம் போடுவதும் உண்டு

தொடர்ந்து 05.09.1997 இல் நவக்கிரகங்கள் நிறுவப்பட்டன. பிரதோஷ நாட்களில் சிவனைத் தரிசிக்க வேறு அலயங்கள் சென்ற பக்தர்கள் சிவனுக்கும் ஒரு சன்னதி அமைக்க வேண்டுகோள் விடுக்க, அருள்மிகு சுந்தரேஸ்வரர், மீனாட்சி, சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னதிகளும் நிறுவப்பட்டு அதனுடன் அரசும் வேம்பும் ஒன்றிணைந்த மரத்தடியில் நாக தேவதைகளும் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு மீண்டும் குடமுழுக்கு விழா 15.09. 2005 இல் இனிதே நடத்தப்பட்டது.

இன்னும் அருள்மிகு அலர்மேல் மங்கைத்தாயார் உடனுறை திரு வேங்கடமுடையான் சன்னதியுடன், ஐயப்பன், முருகன் சன்னதியுடன் ஆலய அலுவலகமும் உருவாக்கப்பட்டு மீண்டும் ஒரு குடமுழுக்கு விழா 25.09.2009 இல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

திருக்கோவிலைச் சுற்றிப் பல புதிய நகர் பகுதிகள் உருவாகியதால் அனைத்து பகுதிகளும் நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையிலும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் வருங்காலத்தில் சிக்கல்கள் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், காலபோக்கில் ஸ்ரீ விநாயக பக்த ஜன சபா என்ற அமைப்பு தொடரமுடியாத காரத்தினாலும்  ஸ்ரீ விஜய கணபதி இந்து சேவா டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையாக திரு மா.கண்ணன் அவர்கள் நிறுவனர் மற்றும் தலைவராக பொறுப்பேற்க இந்த அறக்கட்டளை பதிவு எண்1117/2012 ஆக  29/10/2012 அன்று பல்லாவரம் சார்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டு  இன்றளவும் சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது

இந்தச் சூழ்நிலையில் ஒரு பக்தரின் ஆர்வ மிகுதியால் அவர் வேண்டுகோளுக்கிணங்க சிறிய ஆஞ்சநேயர் சன்னதிக்கு பதிலாக அவரால் வாங்கி கொடுக்கப்பட்ட பெரிய ஆஞ்சநேயருக்கு பெரிதாக சன்னதி அமைக்கப்பட்டது  இதுவும் 05. 07. 2018 இல் நிறுவப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஆலயத்தின் 25 ஆண்டு நிறைவாக  21.08.2016 அன்று குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது அது சமயம் முதல் மாடியில் சிறு விழா அரங்கமாக திருவிருந்துக் கூடம் திறக்கப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கும்  தரப்பட்டது.  பிறந்தநாள் சீமந்தம் சஷ்டியப்த பூர்த்தி விழா மற்றும் திருமணங்களும் இந்த அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த அரங்கம் சுமார்  250 பேர் அமரும் வகையில் உள்ளது.

2024 ஆம் வருடம் மார்ச் மாதம் இவ்வாலயத்தினை முழுமையாக புனரமைப்பு, செய்ய வேண்டும் என்று முடிவு செய்து புதியதாக அருள்மிகு லிங்கோத்பவர் சரஸ்வதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதி உடன் தட்சிணாமூர்த்தி முருகர் வள்ளி தெய்வானை துர்க்கை பைரவர் சன்னதிகளை பெரிதாக நிறுவ  முடிவு செய்து புனரமைப்பு வேலை தொடங்கப்பட்டது  முற்றிலும் மாறுபட்ட நிலையில் மிகப் பிரம்மாண்டமாய் மாற்றி அமைக்கப்பட்ட ஆலயத்தில்  2024ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் 08.09.2024 அன்று குடமுழுக்குத் திருவிழா  சீரும் சிறப்புமாய் நடைபெற்றது

ஆலயத்தின் தனிச் சிறப்பு அம்சங்கள்

அருள்மிகு பெருமாளும் தாயாரும் ஒன்றிணைந்திருக்கும் சன்னதி தினம் தினம் சொர்க்கத்தில் நின்று தரிசனம் தரும் சன்னதி ஆக இறையுணர்வாளர்களால் மதித்து வணங்கப்படுகிறது. (இது வடக்கு நோக்கி நின்று பெருமாளும்  தாயாரும் தரிசனம் தரும் சிறப்பு ஆலயமாக கருதப்படுகிறது)

அருள்மிகு பிரம்மா,விஷ்ணு. சிவன் மூவரும் தேவியர் சரஸ்வதி, மஹாலஷ்மி,பார்வதி (மீனாட்சியாக) மூவரும் ஒரே வளாகத்தில் ஒரு சேர அருள்பாலிக்கும் ஆலயமாகக் விளங்குகிறது.

இத்திருக்கோயில் தொடக்கம் முதல் இன்று வரை பகுதிமக்களும் இறையன்பர்களும் அளிக்கும் நன்கொடையை மட்டுமே நிதி ஆதாரமாகக் கொண்டு இந்த மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..

இக்கோயில் ஆரம்ப முதலே மொழி, இனம் போன்ற எவ்வித ஏற்றத் தாழ்வுக்கும் இடம் அளிக்காமல் அனைவருக்கும் சமமாகவே மதிப்பளித்து, கோவில் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இறையன்பர்கள் வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் பொங்கல், பாயாசம், சுண்டல் போன்றபதார்த்தங்கள் நைவேத்தியம் செய்யப்பட்டு வருபவர் அனைவருக்கும் முறையாக விநியோகிக்கப்படுகிறது.

 திருக்கல்யாணம் திருஊஞ்சல் ஆட்டம், திருவாசக உரைகள் நாமாவளி மற்றும்பஜனை பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

Scroll to Top